நீட் விலக்கு விவகாரம் மாநிலங்களவையில்
தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
புதுடெல்லி:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ஆளுநரின் செயலை விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மாநிலங்களவையில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார்.
இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.