ராகுல், காங்கிரஸ் தலைவராக
செப்டம்பர் மாதம் தேர்வு
தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
புதுடெல்லி:
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் அமேதியில் அவர் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியிடம் தோல்வியை தழுவினார். வயநாட்டில் வெற்றி பெற்றார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையொட்டி ராகுல் காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க வேண்டும் என தொண்டர்கள் வற்புறுத்தினார்கள்.
ஆனாலும் அவர் மவுனம் காத்து வந்தார். இதையடுத்து காங்கிரஸ் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 5 மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இவை அனைத்தும் முடிந்ததும் காங்கிரஸ் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தற்போது ராகுல் காந்தி கட்சி பணியில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி, தனது சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று அவர் காங்கிரஸ் ஆளும் சண்டிகார் முதல்- மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக்கெலாட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களின் நிலவரம் குறித்தும் காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் செப்டம்பர் மாத இறுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் ராகுல் காந்தியை மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.