நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்



சென்னை:

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதலே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப் பதிவு மையத்திற்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலினும் தமது வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகள் மூலமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். 

ராணுவம் வரக் கூடிய அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடை பெறவில்லை. தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். 

நகை கடன் வழங்கியதில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது.21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.