மு.க.ஸ்டாலின் பேசும்போது அமளி- சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றம்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்த ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விவாதம் நடந்தது. 3-வதுநாள் விவாதத்துக்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை வழக்கம் போல் கூடியது.
கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த ஜெயலலிதா ஓய்வு எடுத்த கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக பேச தொடங்கினார். உடனே சபாநாயர் குறுக்கிட்டு என்னிடம் அனுமதி பெறாமல் நேரமில்லா நேரத்தில் பேசுவது போல் பேசுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என்றார். என்றாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசினார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு..க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்றனர். சபாநாயகர் அனுமதி அளிக்காததால் கோஷமிட்டனர். பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம் என்று குரல் எழுப்பினார்கள். பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் காண்பித்தனர். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் பலமுறை கூறினார். என்றாலும் அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள். இருப்பினும் சபாநாயகர் எடப்படி பழனிசாமி பேச அனுமதி வழங்கவில்லை. அவரது பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். அப்போது சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அ.தி.மு.க.வினர் கோஷமிட்டபடியே வெளிநடப்பு செய்தனர். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை லாபியில் அமர்ந்தும், சட்டசபை வாயிலில் நின்றும் கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷமிட்ட படியே வெளியேறினார்கள்.