புதுச்சேரி மாநிலத்தை ஆட்சி செய்த செவாலிய செல்லான் நாயக்கர்

 


1928 ஆம் ஆண்டு செல்லான் நாயக்கரின் கட்சி ஆட்சி அதிகாரங்களை புதச்சேரியில் கைப்பற்றியது. உழவக்கரை மேயர் பிரநிதிகள் சபை தலைவர் ஆளுநருக்கும் இல்லாத அதிகாரங்களை கொண்ட பொதுக்குழு தலைவர் என அனைத்து பதவிகளையும் பெற்று சிறப்புடன் ஆட்சி செய்தார். ஒரு கிராமத்து இளைஞனாக அவரது வாழ்க்கையை தொடங்கி கல்வியில் சாதனைப் படைத்தவர். வழக்கறிஞர் படிப்பை முடித்து பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கும் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்து இன்றும் இவரது வழிகாட்டுதல் சட்டங்களையே பிரெஞ்சுக்காரர்கள் பின்பற்றுகின்ற சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

செவாலிய செல்லா நாயக்கர் புதுச்சேரியில் மிகப்பெரும் செல்வந்தவர்களில் ஒருவர். அவர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது உலக புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை கச்சேரி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் சூழ்ச்சிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ஆட்சியில் இருந்த கேப்ளே இந்த மாபெரும் தவறை செய்தார். செல்லான் நாயக்கரை பழிவாங்க வேண்டும் என்றும் ஆட்சி அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்றும் நினைத்த தன்னையும் தன் குடும்பத்தை கைது செய்த கேப்ளேவை புதுச்சேரி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சபதம் ஏற்று அதை செய்து முடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர் செல்லான் நாயக்கர்.

1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றப்பின் புதுச்சேரி மாநிலத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. தலைவர்கள் எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் செல்லான் நாயக்கர் தீர்க்க தரிசனத்தோடு தெளிவான முடிவு எடுத்து புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதை தவிர வேறு வழியில்லை என்று அடித்துக் கூறினார். இதற்கு ஏற்றார்போல் பிரெஞ்சின் பகுதியாக இருக்கும் புதுச்சேரியை இனி இந்தியாவின் பகுதியாக வேண்டும் அதற்கு பிரெஞ்சு அரசு ஆவணம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்த முயற்சியில் வெற்றி கண்டவர்.

-சாமி