மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக 3வது அணி உருவாகும் என்று தொடர்ந்து கமல்ஹாசன் கூறிவருகிறார். மாற்றத்தை விரும்பும் அரசியல் கட்சிகளும், நேர்மையானவர்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்று அவர் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் 3வது அணி அமைவது உறுதி என்று கமல் கூறியிருக்கிறார்
3வது அணியை அமைப்பதன் மூலம் தமிழக அரசியலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் எதிரான ஓட்டுகளை வாங்க முடியும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். தனது தேர்தல் பிரசாரத்தின்போது இதனை அவர் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்று வருகிறார்.
அரசியல் களம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. புத்தாண்டில் தேர்தல் களம் மேலும் பரபரப்பான கட்டத்தை எட்டும். அப்போது கூட்டணி பேச்சு வார்த்தைகளும் நடைபெறும். இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்காததால் கடைசி நேரத்தில் வெளியேறி உள்ளன. வருகிற தேர்தலிலும் கூட்டணி உடன்பாடுகள் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது தாங்கள் கேட்ட சீட் கிடைக்காவிட்டால் சில கட்சிகள் மனம்மாறி மாற்று அணிகளை தேடலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்புகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழலுக்காகவே கமல்ஹாசனும் காத்து இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வெளியேறும் கட்சிகளுடன் பேச்சு நடத்தி அரவணைத்துக்கொள்ள கமல் அதிரடியாக வியூகம் வகுத்துள்ளார்.
3வது அணி தொடர்பாக இப்போது அதிகமாக எதையும் கூற முடியாது. உரிய நேரம் வரும் போது நீங்களே அதனை பார்ப்பீர்கள் என்று அவர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. வருகிற தேர்தலில் 3வது அணியை எப்படியாவது அமைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகளையும் இப்போதே முடுக்கிவிட்டுள்ளார். இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை அதிகமாக தேர்தலில் களம் இறக்க கமல் முடிவு எடுத்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக கமல் கட்சியில் தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும், நேர்மையான அரசு அதிகாரிகளும் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் தமிழக அரசு துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, கமல் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். புதுவையிலும் முக்கிய பிரமுகர்கள் பலர் கமல் கட்சியில் இணைந்துள்ளனர். அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ருத்ர குமாரன் மற்றும் சேரன், துரை ரமேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கமல் கட்சியில் இணைந்துள்ளனர்.
தங்களது பகுதிகளில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு தனி செல்வாக்கோடு திகழும் இவர்கள் மூலம் புதுவையிலும் அரசியல் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கமல் விரும்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இவர்களை போன்று தமிழகத்திலும் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கமல் கட்சியில் இணைய ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறினார்.
இதுபோன்று சமூக பணிகளில் தீவிரமாக இருப்பவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு வருகிற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதன்மூலமே நேர்மையான அரசியலை முன்னெடுக்க முடியும் என்று நிர்வாகிகள் மத்தியில் கமல் அறிவுறுத்தி இருக்கிறார்
- தொகுப்பு