திமுக கோட்டையில் விழுந்த ஓட்டை
2021 தேர்தலில் சரிவை ஏற்படுத்துமா?
சமாளிப்பாரா ஸ்டாலின்!
காங்கிரஸ் இயக்கம் என்பது கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் திமுக என்பது கொட்டிக்கிடக்கின்ற செங்கற்கற்கள் என்று கூறிய பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட இரும்பு கோட்டையில் பாஜக கட்சி ஒரு ஒட்டையை ஏற்படுத்தியுள்ளது (கு.க.செல்வம் எம்.எல்.ஏ). இதன் மூலம் தமிழ்நாட்டின் பாஜக கட்சி தனது செல்வாக்கை நிருபித்து காட்டியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அண்ணா காலத்தில் அரசியல் நிர்வாகிகள் அதனை தொடர்ந்து கலைஞர் காலத்து அரசியல்வாதிகள் தற்பொழுது தளபதி மு.க.ஸ்டாலின் காலத்து நிர்வாகிகள் என்று படிப்படியாக கட்சியின் தலைமை பதவி மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்குள்ளேயே சூழல்கிறது. தற்பொழுது ஒருபடி மேலேயே சென்று உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே திமுகவில் பதவி என்ற நிலை மாறியுள்ளது. மூன்று தலைமுறைகளை கடந்து நான்காவது தலைமுறையாக திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார். அதன் எதிரொலியாக அண்ணா காலத்தில் ஆரம்பித்து மு.க.ஸ்டாலின் காலம் வரை திமுக கழகத்திற்காக கடந்த 60 ஆண்டுகளாக உழைத்து வரும் முன்னொடிகள் மத்தியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சலசலப்புக் காரணம் பதவி என்ற எதிர்பார்ப்பு தான்.
சமீபத்தில் மறைந்த சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இடத்திற்கு மாவட்ட செயலாளராக கு.க.செல்வம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தன்னை நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் அந்த எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது உதயநிதி ஆதரவாளர் ஆன சிற்றரசு என்பவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிருப்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக கொள்கைக்கு சித்தாந்தத்திற்கும் நேர் எதிராக செயல்படும் பாஜக கட்சிக்கு தாவிவிட்டார் கு.க.செல்வம். அகில பாரத தலைவர் நட்டா அவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியை புகழ்ந்து பேசி திமுக கட்சி மேலிடம் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயார் என்று சவால் விட்டுள்ளார் செல்வம்.
இந்த நிகழ்வு சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை தமிழக அரசியலிலும் திமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்த போதும் எதிர்கட்சியாக இருந்த போதும் பல்வேறு நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். ஒருபோதும் காங்கிரஸ் கட்சியிலோ அல்லது பாஜக கட்சியிலோ கம்யூனிஸ்ட் கட்சியிலோ ஒரு திமுகவினர் கூட தங்களை இணைத்து கொண்டது இல்லை. தற்பொழுது அந்த நிலைமாறி தேசிய கட்சியான சியான மத்தியில் ஆளுகின்ற பாஜக ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் சேர்கிறார் என்றால் இது சாதாரண விஷயமாக பார்க்க முடியாது. இத்தகைய செயல் திமுகவிற்கு ஒரு சவாலாகவே மாறிவிடும். ஆபத்து என்பதை நினைத்து பார்க்க வேண்டும். வெகு விரைவில் 2021 இன்னும் 10 மாதத்தில் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு என்பது மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்கின்ற நம்பிக்கைக்கு ஒரு இடையூறாகவும், சரிவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவேளை திமுகவின் தலைவர் பதவி தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் பொதுச்செயலாளர் அதிகாரம் முழுவதும் ஸ்டாலின் அவர்களுக்கே என்பதும் இளைஞரணி செயலாளர் பதவி தனது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மகளிரணி பதவி சகோதரி கனிமொழி அவர்களுக்கும் எடுத்துக்கொண்டதால் திமுகவில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டு துணைச் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி அவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்துள்ளதைப் போல் தற்பொழுது அந்த பட்டியலில் இன்னும் எத்தனைபேர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த தருணத்தில் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர் அதுவும் மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை வெற்றிப்பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.க.செல்வம் அவர் பாஜக கட்சியில் சேர்வதற்கு சென்றுவிட்டார். திமுகவில் கு.க.செல்வம் அவர் வகித்துவந்த செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் சஸ்பென்ட் செய்ய கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. விளக்கம் கேட்டு கட்சி தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்திற்கு எத்ததைய பதிலை அவர் அளித்தாலும் இனிமேல் அவர் திமுகவில் தொடரும் வாய்ப்பை இழந்தவராவர்.
இதிலிருந்து அரசியல் ரீதியாக பார்க்கும் பொழுது திமுக கழகத்தின் மீது மத்திய அரசின் பார்வையும் பாஜக பார்வையும் ஆழமாக பதிந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் 2021 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக அல்லது குறைந்த அளவு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று தோழமை கட்சிகள் ஆதரவுடன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி எந்த அளவிற்கு நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காரணம் 2024 வரை மத்தியில் பாஜக பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் திமுகவோடு எந்தளவிற்கு ஒத்துப்போவார்கள் என்பதை குறிப்பிட்டு கூற இயலாது.
ஒருவேளை கழகங்கள் இல்லாத அரசு கவலை இல்லாத தமிழகர்கள் என்ற இலக்கை நோக்கி பாஜக கட்சி தங்களை அரசியல் நகர்வுகளை அதிவேகமாக நகர்த்தினால் இரண்டு கட்சிகளையும் தாண்டி ஒரு ஆட்சியை உருவாக்கலாம் என்ற இலக்கை அடைவதற்கு அஸ்திவாரமாக பாஜக கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் ஒரு முன்னுதாரனமாக அமைய கூடும்.
சிறிய ஒட்டை தானே என்று திமுக அலட்சியமாக இருந்தால் பெரிய ஒட்டைக்கு வழிவகுத்துவிடும்.
சொடுக்கு போடுவதற்குள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று அடிக்கடி மு.க.ஸ்டாலின் கூறிவந்தார். ஒருவேளை ஆட்சி கவிழ்ப்பு தள்ளிபோவதற்கு கு.க.செல்வம் போன்றோர் திமுகவில் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை தெரிந்து தான் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஈடுபடவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- டெல்லி குருஜி